இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில், ஐந்து கட்டங்களாக 428 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (25-05-24) 7 மணியளவில் ஆறாம் கட்டமாக 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இறுதிக்கட்டத் தேர்தலான ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெறும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், பீகார் மாநிலம் பாடலிபுத்திரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (25-05-24) நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “என்னைப் பொறுத்தவரை, பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பு மற்றும் மதிப்புகள் மிக முக்கியமானவை. இந்தியா கூட்டணி, அவர்களின் வாக்கு வங்கியை அடிமைப்படுத்தலாம் ஆனால் நான் பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டுடன் இருக்கிறேன்.
இஸ்லாமியர்களுக்கு ஓபிசி அந்தஸ்து வழங்கப்பட்டது. எனவே அரசு வேலைகளில் ஓபிசிகளுக்கு இருக்க வேண்டிய சலுகைகள் இந்த சமூகங்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியா கூட்டணியின் வாக்கு ஜிஹாத் ஆதாயத்திற்காக பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இதேபோல், காங்கிரஸ் ஆட்சியில், கர்நாடகாவில் ஒரே இரவில் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஓபிசி அந்தஸ்து வழங்கப்பட்டது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி இந்த உண்மையை மறுக்க முடியாது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதன் மூலம், நாட்டில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை வழங்க விரும்புகிறார்கள்.
இந்தியா கூட்டணியினர், நாட்டை பயமுறுத்தினார்கள். கடந்த 70 வருடங்களாக நாட்டை அச்சுறுத்தி வருகின்றனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் நாட்டில் குழப்பம் ஏற்படும் என்று கூறுகின்றனர். இன்று, ராமர் ஒரு பெரிய கோவிலில் அமர்ந்திருக்கிறார். ஏதேனும் குழப்பம் இருந்ததா? ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை நீக்கினால், மக்கள் பாகிஸ்தானுக்கு செல்வார்கள், நாட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறுவார்கள். அவர்களின் மிரட்டலுக்கு மோடி அஞ்சவும் இல்லை, நிறுத்துவதும் இல்லை. இன்று, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக எதையும் செய்வதற்கு முன் 100 முறை சிந்திக்கிறது. காங்கிரஸ், ஆர்ஜேடி ஆட்சியில், நக்சல்கள் அனைவரையும் பயமுறுத்தினர். மோடி பயப்படவில்லை. நக்சல்கள் வேகமாக விரட்டியடிக்கப்படுகிறார்கள்” என்று கூறினார்.