கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, டெல்லியில் உள்ள இந்திய கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு நேற்று (23-12-24) நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றுகின்றன. இந்த உணர்வை வலுப்படுத்த நாம் அனைவரும் பணியாற்றுவது முக்கியம். இருப்பினும், வன்முறையை பரப்பி, சமூகத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் நடப்பது என் மனதிற்கு வேதனை அளிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் என்ன நடந்தது என்று பார்த்தோம். இவ்வாறான சவால்களை எதிர்கொள்வதற்கு நாம் ஒன்றுபடுவது அவசியமாகும்.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் எட்டு மாதங்களாக சிக்கி, பணயக்கைதியாக இருந்த அலெக்சிஸ் பிரேம் குமாரை இந்தியா பாதுகாப்பாக அழைத்து வந்தது எனக்கு மிகவும் திருப்திகரமான தருணமாக இருந்தது. எங்களைப் பொறுத்தவரை, இந்த பணிகள் அனைத்தும் வெறும் இராஜதந்திர பணிகள் அல்ல, குடும்ப உறுப்பினர்களை மீண்டும் கொண்டு வருவதற்கான உணர்ச்சிபூர்வமான அர்ப்பணிப்பு. நம் அனைவரின் கூட்டு முயற்சிகள் நம் நாட்டை முன்னேற்றும் என்று நான் நம்புகிறேன். வளர்ந்த இந்தியா என்பது நம் அனைவரின் லட்சியம், அதை நாம் அனைவரும் இணைந்து அடைய வேண்டும். வரும் தலைமுறையினருக்கு ஒளிமயமான இந்தியாவை விட்டுச் செல்வது நமது பொறுப்பு.
இன்றைய இந்தியா, இந்தியாவின் குழந்தைகள் உலகில் எங்கிருந்தாலும், அவர்கள் எந்தப் பிரச்சனையில் இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுகிறது. இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் தேசிய நலனுடன், மனித நலனுக்கும் முன்னுரிமை அளிக்கிறது.இதை கொரோனா காலத்தில், உலகம் முழுவதும் பார்த்து உணர்ந்தது” எனப் பேசினார்.