சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பல மத்திய அமைச்சர்கள் இன்று (21.06.2021) யோகாவில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, இன்று யோகா தின சிறப்புரையாற்றினார். அப்போது எம்-யோகா என்ற செயலியையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். ''நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'' என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசியவை வருமாறு:
இன்று முழு உலகமும் கரோனாவிற்கெதிராக எதிராகப் போராடும்போது யோகா நம்பிக்கையின் ஒளிக்கதிராக மாறிவிட்டது. இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவிலோ அல்லது உலகிலோ எந்தவொரு பொது நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. ஆனாலும் யோகா மீதான பேரார்வம் குறையவில்லை. இந்த சர்வதேச யோகா தினத்தில் 'ஆரோக்கியத்திற்கான யோகா’ என்ற உள்ளடக்கம், யோகா செய்ய மக்களை இன்னும் அதிகமாக ஊக்குவித்துள்ளது. ஒவ்வொரு நாடும், பிராந்தியமும், மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
இன்று மருத்துவ விஞ்ஞானம் கூட மருத்துவ சிகிச்சையைத் தவிர, குணப்படுத்தும் செயல்முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. குணப்படுத்தும் பணிக்கு யோகா உதவுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க டாக்டர்கள் யோகாவைக் கவசமாகப் பயன்படுத்தினர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யோகா கற்பிக்கும், சுவாச பயிற்சிகளைக் கற்பிக்கும் படங்கள் நிறைய இருகின்றன. இந்தப் பயிற்சிகள் சுவாச அமைப்பை பலப்படுத்துகின்றன என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து, இந்தியா மற்றொரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இப்போது எம்-யோகா செயலி வெளியிடப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ளவர்களுக்காக வெவ்வேறு மொழிகளில் யோகா பயிற்சி வீடியோக்களைக் கொண்டிருக்கும். இது 'ஒரு உலகம், ஒரு ஆரோக்கியம்' என்ற நமது குறிக்கோளுக்கு உதவும்.”
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.