Skip to main content

சைபர் தாக்குதலை சீனா நடத்தியதற்கான ஆதாரம் இல்லை - மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

r k singh

 

மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் கடந்த வருடம் அக்டோபர் 12 ஆம் தேதி, மின்தடை ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் மும்பை முழுவதும் இருளில் மூழ்கியது. இந்தநிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான ரெர்கார்டட் ஃபியூச்சர், ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சீனப் பின்னணி கொண்ட 'ரெட் எக்கோ' என்ற குழு, மால்வேர் மூலம் இந்திய மின் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட அமெரிக்க ஊடகம், இந்தியா-சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில், நடைபெற்ற மோதலின் தாக்கமாக இந்த சைபர் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் எனவும், மும்பையில் ஏற்பட்ட மின்தடைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தது.

 

இதனையடுத்து மஹாராஷ்ட்ரா மாநில காவல்துறையின் சைபர் பாதுகாப்புப் பிரிவு, இதுகுறித்து விசாரித்து அம்மாநில அரசிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையைப் பற்றி மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் விரைவில், அம்மாநில சட்டப்பேரவையில் பேசவுள்ளார். அந்த அறிக்கையில் சைபர் தாக்குதல் நடைபெற்றதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரெர்கார்டட் ஃபியூச்சரின் ஆய்வறிக்கை குறித்து விளக்கமளித்த மத்திய மின்துறை அமைச்சகம், குறிப்பிட்ட சைபர் தாக்குதலால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறியது. அதேநேரத்தில், அமெரிக்க ஊடகம் கிளப்பிய சந்தேகத்தின்படி மும்பையில் சைபர் தாக்குதல் நடைபெற்றதா? அதன் காரணமாக மின்தடை ஏற்பட்டதா? அதன் பின்னணியில் சீனா இருந்ததா என்பது குறித்து மின் அமைச்சகம் குறிப்பிடவில்லை.

 

இந்தநிலையில் இதுதொடர்பாக மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங்குடன் பேசியுள்ளார். இதுகுறித்து அனில் தேஷ்முக், சைபர் தாக்குதல் பிரச்சினை மும்பையோடு முடிந்துவிடாது. அது நாடு முழுவதும் பரவக்கூடும். இந்தப் பிரச்சினையை நாம் அரசியலாக்கக்கூடாது. இது குறித்து மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்குடன் பேசியுள்ளேன். அவர் அதைப் பற்றிய விவரங்களைக் கேட்டுள்ளார். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்" எனத் தெரிவித்தார்.

 

இந்தநிலையில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், "இரண்டு குழுக்கள் மின்தடை குறித்து விசாரித்தது. ஒரு குழு மின்சார செயலிழப்பு மனித தவறால் ஏற்பட்டது. சைபர் தாக்குதலால் அல்ல என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சைபர் தாக்குதல் நடந்தது என்று இன்னொரு குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால், அந்த தாக்குதலால் மும்பையில் மின்வெட்டு ஏற்பட்டதாகக் கூறப்படவில்லை. நமது வடக்கு மற்றும் தெற்குப் பிராந்திய மையங்களில் சைபர் தாக்குதல்கள் நடந்தன. ஆனால், அவர்களால் (ஹேக்கர்ஸ்) நமது ஆபரேட்டிங் சிஸ்டத்தை அடைய முடியவில்லை. மும்பையில் உள்ள தங்களின் மின் அமைப்பில் சைபர் தாக்குதல்கள் நடந்ததாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சைபர் தாக்குதலை, சீனா அல்லது பாகிஸ்தான் நடத்தியது என்பதற்கு நம்மிடம் ஆதாரங்கள் இல்லை. தாக்குதல்களுக்குப் பின்னால் சீனர்கள் உள்ளார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், நம்மிடம் ஆதாரங்கள் இல்லை. சீனா நிச்சயமாக அதை மறுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே இந்த சைபர் தாக்குதலில் தொடர்பில்லை என சீனா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்