Skip to main content

“ஹரியானா அரசின் முன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்று கேட்க முடியும்” - ஆம் ஆத்மி அமைச்சர்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 pleads the Delhi minister to Haryana government

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. 

மேலும், ஹரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டதால், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னும், சில பகுதிகளில் வாழும் மக்கள் டேங்கர் லாரியை நோக்கி முண்டியடித்துக் கொண்டு தண்ணீரைப் பிடிப்பதற்காக காலி குடங்களுடன் செல்லும் காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

சில தினங்களுக்கு டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவ வேண்டும் என உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசு முதல்வர்களுக்கு டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியிருந்தார். மேலும், உ.பி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் டெல்லிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து அம்மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி இன்று (17-06-24) வசிராபாத் தடுப்பணையை ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “வசிராபாத் அணையில் இருந்து தண்ணீர் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. வசிராபாத் அணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இப்போது ஆற்றுப் படுகை தெரியும் அளவுக்கு நீர்மட்டம் குறைந்துவிட்டது. டெல்லி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைத் தீர்க்க ஹரியானா அரசிடம் நாம் முறையிட மட்டுமே செய்யலாம். 

ஹரியானா மாநிலம் யமுனையில் இருந்து தண்ணீர் விடாத வரை, டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடரும். முனாக் கால்வாயில் மிகக் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. மறுபுறம், வசிராபாத் அணைக்கு தண்ணீர் வரவில்லை. ஹரியானா அரசின் முன் கைகளை கட்டிக்கொண்டு நின்று டெல்லி மக்களின் உயிர் அவர்களின் கையில் உள்ளது என்று என்னால் கூற முடியும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்