தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கேரளாவில் இதுவரை மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 102 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 59 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அந்த 59 பேரையும் தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து பொதுமக்களால் கேரளாவிற்கு ஏராளனமான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் இரு தினங்களுக்கு முன்னர் தி.மு.க சார்பில் முதற்கட்டமாக 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன், "தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம்" என தெரிவித்தார். தனது மற்றொரு ட்வீட்டில், "சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் (@mkstalin) அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் லாரிகளில் நிவரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.
சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் (@mkstalin) அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் லாரிகளில் நிவரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கு நன்றி.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 15, 2019