கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவு ஏராளமானோர் உயிரிழந்து இந்தியாவையே உலுக்கியுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட வீரர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் (03.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344ஆக உயர்ந்துள்ளது. மேலும் முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேப்பாடி ஆகிய இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் முண்டக்கை பகுதியில் அமைக்கப்பட்ட இரும்பு பாலம் வழியாக பல்வேறு உபகரணங்கள் கொண்டு சென்று மீட்புப் பணிகள் தீவிரப்படுத்து வருகின்றன.
இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது, “வயநாடு பேரிடர் மீட்புப்பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளன. இதயத் துடிப்பைக் கண்டறிந்து ஒவ்வொருவரையும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர். இதுவரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 87 பெண்களும், 30 குழந்தைகளும் அடங்குவார்கள். மீட்கப்பட்ட 215 உடல்களில் 148 பேர் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சூரல்மலையில் மட்டும் 10 நிவாரண முகாம்களில் 1,707 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதித்த மக்களுக்கு வீடு, நிலம் வழங்க பலர் முன் வந்திருப்பது அவர்களின் அன்பைக் காட்டுகிறது. பேரிடருக்கு உதவ 91889 40013 மற்றும் 91889 40015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.