கடந்த சில தினங்களுக்கு இந்தியர்களின் முன்பு வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்பட்டதாக வாட்ஸ் நிறுவனமே அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயளார் பிரியங்காவின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது. இது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தனது செல்போன் தகவல்கள் மத்திய அரசால் உளவு பார்க்கப்பட்டுள்ளதாகவும், ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது தொலைபேசி, செல்போன் மற்றும் வாட்ஸ்-அப்போ தனிநபர் தகவல் பறிமாற்றத்திற்கு பாதுகாப்பானதாக இல்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், " மத்திய அரசு அதன் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்களைக் கொடுக்க வேண்டும். சில சமயங்களில் இந்த ஒட்டுக்கேட்பு வேலை அலுவலக நேரத்திற்குப் பிறகு செய்யப்படுகிறது. ஆனால் இப்போது எங்கள் பேச்சுகள் பதிவு செய்யப்படும்போது, அரசாங்கம் எவ்வாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க முடியும். இந்த பிரச்சினையை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.