இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
அதேபோல், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'பெட்ரோல், டீசல் விலையின் தொடர் உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியில் லிட்டருக்கு ஒரு ரூபாயைக் குறைத்து மேற்கு வங்க அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (21/02/2021) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "எண்ணெய் வள நாடுகள் உற்பத்தியைக் குறைத்ததால் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்ததால் இந்தியா போன்ற இறக்குமதி செய்யும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன. இது நடக்கக் கூடாது என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதில் மாற்றம் வரும் என நாங்கள் நம்புகிறோம். எண்ணெய் வள நாடுகள் அதிக லாபம் பெறுவதற்காகக் குறைந்த அளவில் உற்பத்திச் செய்கின்றன" எனத் தெரிவித்தார்.