உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 75,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்தியாவை பொறுத்தவரையில் மாநிலத்துக்கு மாநிலம் கரோனாவின் தாக்கம் வித்தியாசமாக இருந்து வருகின்றது. தென் இந்தியாவில் முதலில் கரோனா பாதிப்புக்கு உள்ளான கேரளா இன்று கரோனா-வை சிறப்பாக கையாளும் அளவிற்கு முன்னேறியுள்ளது. அங்கு கடந்த வாரத்தின் மூன்று நாட்கள் கரோனா பாதிப்பு பதிவாகாமல் இருந்தது. இன்று 24 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே போன்று கர்நாடகாவிலும் கரோனா பாதிப்பு என்பது தமிழகத்தை ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. பல மாவட்டங்கள் பசுமை மண்டலமாக இருந்து வருகின்றது. ஆந்திராவில் தமிழகத்தில் உள்ளதை போல் தினமும் சில நூறு கரோனா தொற்று கண்டறியப்படுகின்றன. ஆனால் இந்த மாநிலங்கள் அனைத்தையும் விட புதுச்சேரி கரோனா பாதிப்பில் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. கிட்டதட்ட 18 பேர் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகின்றது. கரோனா தொற்று எண்ணிக்கை குறைவு ஒரு காரணமாக இருந்தாலும், மக்கள் அடர்த்தி குறைவாக உள்ளது இதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.