மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினி மகாகாளேஸ்வரர் கோவில் 316 கோடி செலவில் புனரமைக்கப்பட்டதில் முதல் கட்ட பணிகள் முடிவுற்றது. கோவிலை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.
கோவிலில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி புதிதாக அமைக்கப்பட்ட சிவலிங்கத்தை திறந்து வைத்தார். கோவிலின் முதல்கட்ட பணியில் புராண காட்சிகளை விளக்கும் 93 சிலைகள் கோவிலில் நிறுவப்பட்டுள்ளன. ருத்ர சாகர் ஏரி சுத்திகரிக்கப்பட்டு அதன் கரைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த தாமரைக் குளம் பிரசங்க மண்டபம் முதலியவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
கோவிலின் பணிகளில் 70 சதவீதம் முடிவுற்றுள்ளது. அடுத்தாண்டின் முதல் காலாண்டுக்குள் மீதமுள்ள பணிகளும் நிறைவுற்று விடும். அதன் பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.
பூஜைகள் முடிந்த பின் கோவிலில் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியா தனது பெருமை மற்றும் வளமையை மீட்டு வருகிறது. இதன் பலன் ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் கிடைக்கும். இந்தியா தனது ஆன்மீக பலத்தால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும் அழியாத புகழுடன் விளங்குகிறது. நாடு முன்னேற்றம் காண அதன் பண்பாட்டு அடித்தளம் உறுதியாக இருக்க வேண்டும். தனது பாரம்பரிய மதிப்பீடுகளுடன் இந்தியா முன்னேறி வருகிறது. இந்தியாவின் தத்துவார்த்த நிலை மீண்டும் உலகை வழிநடத்திச் செல்லும்” எனக் கூறியுள்ளார்.