இந்தியா முழுவதும் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட இருக்கிறது. இந்தநிலையில் காந்தி ஜெயந்தி நாளை மாமிசம் உண்ணா நாளாக அறிவிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. பீட்டா இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மணிலால் வள்ளியட் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில் மணிலால் வள்ளியட், சைவ உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதைக் காந்தியின் தார்மிக கொள்கையாக இருந்தது எனக் கூறியுள்ளதோடு "காந்தியின் தார்மீக முன்மாதிரியைப் பின்பற்ற நம் நாட்டு மக்களை ஊக்குவிப்பது, உடல் பாகங்களுக்காகக் கொடூரமாகக் கொல்லப்படுவதிலிருந்து விலங்குகளைப் பாதுகாக்கும்" எனவும், "சைவ உணவை ஊக்குவிக்கும் ஒரு பாரம்பரியத்தைத் தொடங்குவது காந்தியின் அளவிட முடியாத தாக்கத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு நீடித்த வழியாக இருக்கும்" எனவும் தெரிவித்துள்ளார்.