வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த வன விலங்குகள் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை வயநாட்டில் வன விலங்குகள் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து வயநாடு பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை இன்று ஒருநாள் தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு வயநாடு தொகுதிக்கு திரும்பினார். இதனையடுத்து வயநாட்டில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதன்படி யானை தாக்கி உயிரிழந்த வனக்காவலர் அஜீஷின் என்பவர் வீட்டிற்கும், புலி தாக்கியதில் உயிரிழந்த பிரஜீஷின் வீட்டிற்கும், சுற்றுலா வழிகாட்டி பாலின் வீட்டிற்கும் இன்று காலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களையும் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.