ஒரே கழிவறையின் முன்பு மக்களை நிறுத்தி புகைப்படங்கள் எடுத்து, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை பஞ்சாயத்து நிர்வாகிகள் வாரிச்சுருட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சூளூர் அருகே உள்ளது கே.மதப்பூர் கிராமம். இந்த கிராமத்தில் 2015 - 2016 காலகட்டத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 158 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ.12ஆயிரம் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆங்கில இதழ் ஒன்று சமீபத்தில் நடத்திய ஆய்வில், பயனாளர்கள் என்று சொல்லப்படும் யாருக்கும் கழிவறைகள் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
புதிதாக கட்டப்பட்ட ஒருசில கழிவறைகள், முன்னரே கட்டப்பட்டிருந்த கழிவறைகள் என அனைத்திலும், தூய்மை இந்தியா என எழுதி அந்தப் பகுதி மக்களை அவற்றின் முன் நிறுத்தி புகைப்படங்களை எடுத்துள்ளனர். பக்கத்து கிராமத்திலிருந்து உறவினர்களின் வீடுகளுக்கு வந்தவர்களையும் நிறுத்தி புகைப்படம் எடுத்தது கொடுமையிலும், கொடுமை. இதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களே ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த மோசடியின் மூலம் பஞ்சாயத்து நிர்வாகிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சில இடைத்தரகர்கள் என பலரும் பயனடைந்துள்ளனர்; பயனாளர்கள் விடுத்து. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் இந்த செய்தி குறித்து, விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உயரதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.