
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் கோயிலுக்குச் சென்றதால் அக்கோயிலை பா.ஜ.க தலைவர் சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த டிக்கா ராம் ஜுல்லி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். ஆல்வார் தொகுதி எம்.எல்.ஏவான இவர், ராம நவமி பண்டிகையின் போது ஆல்வார் நகரில் உள்ள கோயில் கும்பாபிஷேக விழா ஒன்றில் பங்கேற்றார்.
இதனால், கோயில் புனிதம் கெட்டுபோய்விட்டதாகக் கூறி பா.ஜ.க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவான கியான்தேவ் அகுஜா, மறுநாள் அந்த கோயில் வளாகத்திற்குச் சென்று கங்கை நீரைக் கொண்டு சுத்தம் செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “சில அசுத்தமானவர்கள் கோயில் வளாகத்திற்குள் நுழைந்ததால், கோயிலைச் சுத்திகரிப்பது முக்கியம். நான் எந்த பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், கோயிலுக்கு யார் சென்றார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். நான் என் வாயை அழுக்காக்க விரும்பவில்லை” என்று கூறினார். பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ கியான்தேவ் அகுஜா கோயில் வளாகத்தை கங்கை நீரைக் கொண்டு சுத்தம் செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கட்சியில் இருந்து கியான்தேவ் அகுஜா சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பா.ஜ.க தலைமை அறிவித்தது. இது குறித்து ராஜஸ்தான் பா.ஜ.க மதன் ரத்தோர் கூறியதாவது, “நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்து 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு கேட்டோம். இருப்பினும், அவர் எனக்கு தொலைபேசியில் தெளிவுபடுத்தினார். ஆனாலும், அரசியலமைப்புச் சட்டம் அத்தகைய செயலை பொறுத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.