2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இந்தப் பட்ஜெட்டில் சாமானியர்களுக்கு ஒன்றுமே இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.
இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது;
மக்களுக்குத் தோழமையான மற்றும் முற்போக்கான இந்தப் பட்ஜெடிற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வாழ்த்துகிறேன். நாட்டிலேயே முதன்முறையாக இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளில் பர்வத் மாலா' திட்டம் தொடங்கப்படுகிறது. இது மலைகளில் நவீன போக்குவரத்து மற்றும் இணைப்பு முறையை எளிதாக்கும். இதன் மூலம் எல்லையோர கிராமங்கள் வலிமையடையும்.
தாய் கங்கையை சுத்தப்படுத்துவதை தவிர, விவசாயிகளின் நலனுக்காக ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கங்கை நதிக்கரையில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். இது கங்கை நதியை இரசாயனமற்றதாக மாற்ற உதவும்.
இந்தப் பட்ஜெட் மக்களுக்கு புதிய நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. இது பொருளாதாரத்தைப் பலப்படுத்துகிறது. இந்தப் பட்ஜெட் அதிக உள்கட்டமைப்புகள், அதிக முதலீடுகள், அதிக வளர்ச்சி மற்றும் அதிக வேலைகள் ஆகியவை நிறைந்தது. பசுமை வேலைகளுக்கான புதிய திட்டமும் உள்ளது. இந்தப் பட்ஜெட் இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது. நாளை காலை 11 மணிக்கு பட்ஜெட் மற்றும் சுயசார்பு இந்தியா என்ற தலைப்பில் பேச பாஜக என்னை அழைத்துள்ளது. நாளை பட்ஜெட் குறித்து விரிவாகப் பேசுவேன்". இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.