மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தொண்டர்கள் மற்றும் திரிணாமூல் கட்சி தொண்டர்களுக்கிடையே அவ்வப்போது, மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் இரு கட்சிகளின் தொண்டர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற வன்முறை, தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் தொடர்ந்து நீடித்து வருகிறது. அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக கட்சியை தேர்தல் பிரச்சாரத்தின் போது கடுமையாக விமர்சித்து வந்தார்.
மக்களவை தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கணிசமான இடங்களை பிடித்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதன் தொடர்ச்சியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவால், அதிருப்தியில் இருந்த, அக்கட்சி மூத்த தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக கட்சியில் இணைந்தனர். இந்நிலையில் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்கான சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார். மக்களவையில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், மசோதாவிற்கு எளிதாக ஒப்புதல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று இந்த மசோதாவை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு சமாஜ்வாதி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு அளித்ததால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது.
இதன் மூலம் காஷ்மீர் மாநிலத்தில் ஆறு மாதத்திற்கு குடியரசுத்தலைவர் ஆட்சி நீடிக்கும். அதாவது ஜூலை 3 முதல் அடுத்த 6 மாதங்களுக்கு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்.மாநிலங்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக கொண்டு வந்த மசோதாவிற்கு ஆதரவளித்ததால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாஜகவிற்கு மம்தா ஆதரவளித்திருப்பதன் மூலம், அக்கட்சி புது வியூகத்தை வகுத்துள்ளதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.