மறு உத்தரவு வரும் வரை அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் எனக் கேரள அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 165- க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,37,553 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ள நிலையில், 18,000க்கும் மேற்பட்டோருக்குச் சோதனை செய்யப்பட்டதில் 415 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை கேரளா முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படலாம் என்பதால் குளிர்பான கடைகளும் அடைக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மதுக்கடைகளை மூட கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் கேரள அரசின் இந்த புதிய அறிவிப்பு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.