கார்கில் வெற்றி தினம் இன்று நாட்டின் பல பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், லடாக் திராஸ் போர் நினைவிடத்தில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த நமது வீரர்களுக்கு, வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் திராஸ் போர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினார்கள். அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் பல பகுதிகளில் கார்கில் போரின் போது மறைந்த ராணுவ வீரர்களைப் போற்றும் விதமாக வீரவணக்கம் செலுத்தினர்.
இதற்கிடையில், எதிரிப்படைகளிடம் வீரத்தையும், இந்திய நாட்டுக்காகத் தியாகத்தையும் செய்யும் படைவீரருக்கு மத்திய அரசு சார்பாக, இந்தியாவின் உயரிய விருதான ‘பரம்வீர் சக்ரா’ விருது வழங்க்கப்பட்டுவருகிறது. இந்த விருது இந்திய வரலாற்றிலேயே 21 பேருக்குத் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 1999 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நடந்தது. அந்தப் போரின் போது இந்திய ராணுவ வீரர் சஞ்சய் குமார், தனி ஆளாகப் பாகிஸ்தான் ராணுவ பங்கருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார். இதனால், இவருக்கு மத்திய அரசால் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சுபேதார் மேஜர் சஞ்சய் குமார் சமீபத்தில் தனியார் விமானத்தில் பயணித்தார். வழக்கமாகச் சாதனையாளர்கள் எவரேனும் விமானத்தில் பயணித்தால், அந்த விமான நிறுவனம் அவர்களைக் கவுரவப்படுத்தும். அந்த வகையில், கார்கில் போரின் போது பரம்வீர் சக்ரா விருது வாங்கிய சஞ்சய் குமாரை, விமான கேப்டன், துணை கேப்டன், ஏர் ஹோஸ்டஸ் மற்றும் விமான ஊழியர்கள் கவுரவித்தனர். அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளும் கை தட்டி சஞ்சய் குமாருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களில், சஞ்சய் குமார் மட்டும் தான் இன்னும் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் குமாரை விமானத்தில் கவுரவப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.