ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை 11.00 மணிக்கு மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
![pandits](http://image.nakkheeran.in/cdn/farfuture/QTU-SCUgMPbJJ5dNBcp5mY-RkpqMx9RPxXuYiN10UAw/1565093974/sites/default/files/inline-images/pandits.jpg)
இதனையடுத்து இன்று காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை நடைபெறுவதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டப்பிரிவு 370 ஐ நீக்கும் மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், காஷ்மீர் பூர்வீக குடிகளான பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்கள் அங்கு பெருமளவில் உள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதம் தலைதூக்கிய பிறகு, அவர்கள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். தற்போது, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் அகதிகளாக போல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, பண்டிட் சமூகத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் நடவடிக்கை தங்களது வாழ்வில் புது வெளிச்சத்தை பாய்ச்சி உள்ளதாகவும், ஆகஸ்ட் 5ஆம் தேதி, தங்களது வாழ்வில் முக்கியமான நாள் என்றும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளனர். தங்களின் அடையாளம், கலாச்சாரம் ஆகியவை பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறிய காஷ்மீர் பண்டிட்கள், விரைவில் தாய் மண்ணுக்குத் திரும்புவோம் எனக் கூறியுள்ளனர்.