மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சேலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த பெண் சென்னை மாதவரத்தில் உள்ள தனது உறவினரைப் பார்க்கச் சேலத்தில் இருந்து பேருந்து மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குக் கடந்த 3ஆம் தேதி (03.02.2025) இரவு 11 மணியளவில் வந்துள்ளார். அதன் பின்னர் மாதவரம் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தான் மாதவரத்தில் இறக்கி விடுவதாகக் கூறி அந்த பெண்ணை ஆட்டோவில் ஏறுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் மறுக்கவே, கத்தியைக் காட்டி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஓட்டுநர் ஏற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சில கிலோமீட்டர் சென்ற பிறகு அடையாளம் தெரியாத 2 பேர் ஆட்டோவில் ஏறியதாகக் கூறப்படுகிறது. பின்னர் ஆட்டோ ஜி.எஸ்.டி. சாலை வழியாக இரும்புலியூர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது ஆட்டோவில் இருந்தவர்கள் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் கத்தி கூச்சலிட்டபோது அருகே இருந்த குடியிருப்பு வாசிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். அதோடு ஆட்டோவில் இருந்த பெண் உறவினர்களுக்கு உதவி தேவைப்படுவதாகக் கூறி லைவ் லோக்கேசனையும் (LIVE LOCATION) அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலின் பேரில் தாம்பரம் போலீசார் ரோந்து வாகனத்தில் சம்பந்தப்பட்ட ஆட்டோவை துரத்திச் சென்றனர். அப்போது நெற்குன்றத்தில் உள்ள ஒரு இடத்தில் பெண்ணை இறக்கிவிட்டு அதில் இருந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். அதே சமயம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின் பேரில் பல்லாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தப்பிச் சென்றவர்களைத் தேடி வந்தனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்ச்செல்வன், தயாளன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தயாளன் சரித்திர பதிவேடு குற்றவாளி என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மூவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.