
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள பிரதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினவேலு(44). இவரது மனைவி சரஸ்வதி(41). இவர்களுக்கு சதீஷ்(23) என்கிற மகன் உள்ளார். இந்த நிலையில், சரஸ்வதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அதில், தனது கணவர் ரத்தினவேலு, மகன் சதீஷ் ஆகியோர் கடந்த ஒராண்டுக்கு முன், மாலத்தீவில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற நிலையில், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, 2 மாதத்திற்கு முன், தனது கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு மாலத்தீவில் சிறையிலிருந்த தனது கணவரை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது. அதேபோல், தனது மகனையும் மாலத்தீவு சிறையில் இருந்து விடுவிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.