ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் திகார் சிறையிலிருந்து முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் வெளியே வந்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. டெல்லி திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரம் ஜாமீன் கோரி நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை டெல்லி உயர்நீதி மன்றம் நிராகரித்துவிட்டது. பின்னர் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில் 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம். டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்த சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.