குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியின் ஷாஹின் பாக் பகுதியில் 50 நாட்களை கடந்தும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்ட களம் டெல்லி தேர்தலுக்கு பின் ஜாலியன்வாலாபாக் போல மாறலாம் என ஒவைசி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடந்த 50 நாட்களாக டெல்லியின் ஷாஹின் பாக் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மீ கட்சிகளின் முக்கிய பேசுபொருளாக இந்த போராட்டம் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து பேசியுள்ள ஒவைசி, "போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படலாம். ஷாஹின் பாக் இடமானது ஜாலியன்வாலாபாக் போல மாறலாம். இது நடக்கக்கூடும். துப்பாக்கியால் சுட வேண்டும் என பாஜக மந்திரி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தீவிரமாக்குவது யார் என்பதற்கு அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். டெல்லி தேர்தல் நேரத்தில் ஒவைசியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.