இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி நாடாளுமன்றத்தையும் அவர்கள் தொடர்ந்து முடக்கிவருகின்றனர்.
இருப்பினும் எதிர்க்கட்சியினர் அமளிக்கிடையே மத்திய அரசு, சில சட்டங்களை நிறைவேற்றிவருகிறது. மேலும் மத்திய அரசு, நாடாளுமன்றத்தை இடையூறின்றி செயல்படவிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துவருகிறது. ஆனால் பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என கூறி, மத்திய அரசின் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்துவருகின்றனர்.
இந்தநிலையில் ராகுல் காந்தி உள்பட திமுக, தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று, அவர்களுக்குத் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், பின்னர் விவசாயிகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகு பேசிய ராகுல் காந்தி, "வேளாண் சட்டங்களுக்கு எதிராக எங்கள் ஆதரவைத் தெரிவிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் இங்கு கூடியுள்ளோம். நாங்கள் பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் அவர்கள் அதை நடக்கவிடவில்லை. நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியனின் தொலைபேசியையும் இடைமறித்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.