
கரோனா தொற்று பரவலால் இந்து கோவில்கள், பள்ளி வாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் பக்தா்கள் தரிசனத்துக்கு இருந்த தடையை தமிழகத்திலும் கேரளாவிலும் அந்த மாநில அரசுகள் நீக்கிய நிலையில் தற்போது அங்கு பக்தா்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் தரிசனம் செய்துவருகின்றனர்.
இதில் கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் சாமி கோவிலில் மட்டும் பக்தா்கள் அனுமதிக்கவில்லை. அங்கு மகர மண்டல கால பூஜை என்பது தான் பிரதானம். அந்த 41 நாட்களிலும் நாடு முமுவதும் இருந்து சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் இருமுடி கட்டி சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு மண்டல மகர பூஜைக்காக சபரிமலை நடை, நவம்பா் 16-ம் தேதி திறக்கப்படுகிறது.
அப்போது பக்தா்கள் மண்டல மகர கால பூஜைக்காக பக்தா்கள் அனுமதிக்கபடுவார்களா? என்ற கேள்வி ஐயப்ப பக்தா்களிடம் எழுந்தது. மேலும் கரோனா தொற்று தமிழகம் கேரளாவில் அதிகமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் சபரிமலைக்கு பக்தா்கள் அனுமதிக்க வேண்டுமா வேண்டாமா? என்ற ஆலோசனையில் கேரளா அரசும் தேவசம் போர்டும் ஈடுபட்டது. இந்த நிலையில் தேவசம் போர்டு மற்ற துறை அதிகாரிகளுடன் நடத்திய பல கட்ட ஆலோசனைகளுக்கடுத்து மண்டல மகர கால பூஜைகளுக்காக பக்தா்கள் அனுமதிக்க முடிவு எடுத்துள்ளது.
அதுவும் தினமும் 5 ஆயிரம் பக்தா்கள்தான் அனுமதிக்கபடுவார்கள் என்றும் அந்த பக்தா்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட வேண்டுமென்றும் அவா்கள் கரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் விதத்தில் மருத்துவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சன்னிதானத்தில் பக்தா்கள் தங்குதற்கு அனுமதியில்லை என்றும் முடிவு எடுத்துள்ளனர்.