கழிவுநீர்த்தொட்டியில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு!:மூவர் நிலை கவலைக்கிடம்
டெல்லியில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யச்சென்ற ஒருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும், மூவர் விஷவாயு தாக்கியதில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் உள்ள கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்ய, நேற்று மருத்துவமனை நிர்வாகம் நான்குபேரை பணியிலமர்த்தியுள்ளது. இந்நிலையில், முதலில் சுத்தம் செய்யச் சென்ற ரிஷிபால் என்பவர் உள்ளே சென்று வெளியே வராததால், மேலும் பிஷன் மற்றும் கிரண் ஆகிய இருவர் அவரை மீட்க தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.
மூவரும் வெளியே வர தாமதமானதால், சுமித் என்பவர் அருகிலுள்ளவர்களை உதவிக்கு அழைத்துவிட்டு, முகமூடியுடன் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். தொட்டிக்குள் மயங்கிக்கிடந்த மூவர் மீட்கப்பட்டுள்ளனர். சிறிதுநேரத்தில் சுமித்தும் மயக்கமடைந்துள்ளார். நால்வரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனை செல்லும் வழியில் ரிஷிபால் உயிர் பிரிந்தது.
மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து ஒரேயொரு முகமூடி தான் பாதுகாப்பிற்காக சுத்தம் செய்ய வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனை நிர்வாக மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியத்தலைநகர் டெல்லியில் கடந்த 35 தினங்களில், கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.
- ச.ப.மதிவாணன்