கஜா புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை நம்மால் எளிதில் மறந்துவிட முடியாது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன. மத்திய மற்றும் மாநில அரசுகளும், சில தனியார் அமைப்புகளும் பல நிவாரண உதவிகள் செய்திருந்தாலும், தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு குறைந்த செலவில் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை உருவாக்கும் போட்டியை யூடியூப் சேனல் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு நடத்தியிருந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற பிறகு இதன்மூலம் கிடைத்த உந்து சக்தியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த செலவில் அதிக வீடுகளை கட்டித்தருவதை தனது இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதன் ராஜ் என்ற இளைஞர்.
தனி ஆளாக வளர்த்தெடுத்த தாய், தன்னை நம்பியுள்ள தங்கை தம்பி, வருமானத்தில் பின் தங்கிய குடும்பம், தமிழ் வழி கல்வியில் படிப்பு. இப்படிப்பட்ட பின்புலத்தை கொண்ட மதன், உதவித்தொகை மூலம் கட்டிட கலையில் பட்டம் பெற்றவர். இவருக்கு 28 வயதாகும். இவருக்கு சிறு வயது முதலே கட்டிட வடிவமைப்பில் அதிக ஆர்வம் இருந்து வந்தது. இயற்கை பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாகவும், தரமாகவும் வீடுகள் அமைத்து தருவது அரசு எதிர்கொள்ளும் பெரிய சவால். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள நினைத்த மதன், வெறும் வருவாய் மட்டும் ஈட்டித்தரும் சராசரி வேலையை விரும்பாதவர் என்பதால், பல மாத ஆராய்ச்சிகளுக்கு பிறகு 'உறையுள்' என்று பெயரிடப்பட்ட மலிவு விலை வீட்டின் இரண்டு பதிப்புகளுக்கான திட்டத்தை இவர் உருவாக்கினார். இதன்படி 340 சதுர அடி பரப்பளவில் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கை அறை, சமையலறை, குளியலறை, குழந்தைகள் படிக்கும் அறை என ஒரு சராசரி குடும்பம் வசிப்பதற்கு போதுமான வீட்டை 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் மதன் வீடு கட்டும் திட்டத்தை உருவாக்கிக் காட்டியிருக்கிறார்.
புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்திலும், ஒடிஷாவிலும் மதன் ராஜ் குழுவை அமைத்து உடனடியாக மாதிரி வீடுகளை அந்த பகுதி மக்களின் உதவியோடு அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். மேலும் வீடுகளை உடனடியாக கட்டமைப்பது தொடர்பான பயிற்சியையும் அளித்து வருகிறது மதன் ராஜ் குழு. இந்தியாவில் பல மாநிலங்கள் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகள் தேசமடைந்து வருவதும், அதனை மறு கட்டமைப்பை அரசுகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பொறியாளர் மதன் கொண்டு வந்த திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற தொடங்கினால், இயற்கை சீற்றத்தின் போது உயிரிழப்புகளையும், சேதங்களையும் பெருமளவில் குறைக்கலாம். அதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பெருமளவில் சேமிக்கலாம் என்றால் எவராலும் மறுக்க முடியாது.