கடந்த 2 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பெரும் விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தவிபத்து தொடர்பாக பல்வேறு ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், சிக்னலை கவனிக்கும் ரயில் நிலைய சிக்னல் இன்ஜினீயரை வீட்டிற்கு விசாரணை செய்யச் சென்றனர். அங்கிருந்த சிக்னல் இன்ஜினீயரிடம் சிபிஐ அதிகாரிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். திடீரென ஒருநாள் அந்த இன்ஜினீயர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
ரயில் இயக்கங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியே சிக்னல் இன்ஜினீயரிங் பணியாகும். சர்க்யூட்டுகள், சிக்னல்கள், இன்டர்லாக் சிஸ்டம் உள்ளிட்ட உபகரணங்களை நிறுவுவது மற்றும் அவற்றை பராமரிப்பது, பாழடைந்தால் அவற்றை மாற்றுவது உள்ளிட்ட பணிகள் சிக்னல் இன்ஜினீயரிங் பணிகள் ஆகும்.
இந்த நிலையில், ஜூனியர் இன்ஜினீயர் தலைமறைவானார் என்பதை இந்தியாவின் தென்கிழக்கு இரயில்வே மறுத்திருக்கிறது. இதனிடையே சி.பி.ஐ அதிகாரிகள் ஜூனியர் இன்ஜினீயர் வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளனர். ஆனால், அப்போது வீட்டில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது.