நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை (04.12.2021) இரவு, தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு அப்பாவிகள் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அந்தக் கிராம மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் மேலும் ஏழு பொதுமக்கள் உயிரிழந்தனர். இதன்பின்னர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறையில் மேலும் ஒரு நபர் பாதுகாப்புப் படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஓட்டிங்கில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து ராணுவத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கமாண்டோக்கள் சந்தேகத்திற்கிடமான பகுதியில் பதுங்கியிருந்தனர். அப்போது அங்கு ஒரு வாகனம் வந்தது. அதனை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டது. ஆனால் அது தப்பிச் செல்ல முயன்றது. அதனால் அது தீவிரவாதிகளை ஏற்றிச் சென்ற வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் வாகனத்தில் பயணம் செய்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர்" என தெரிவித்தார்.
இந்தநிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய துப்பாக்கிச் சூட்டில் குண்டடிபட்டு உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் ஒருவரான ஷெய்வாங், தங்களது வாகனம் தப்பி ஓடவில்லை எனவும், வாகனத்தை நிறுத்தச் சொல்லி எந்த சமிக்கையும் தரப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “அவர்கள் எங்களை நோக்கி சுட்டனர். (வாகனத்தை) நிறுத்தும்படி எங்களுக்கு சமிக்கை செய்யப்படவில்லை. நாங்கள் தப்பியோட முயலவில்லை... வாகனத்தில்தான் இருந்தோம். வேலையை முடித்துவிட்டு வரும் வழியில் திடீரென, எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அது எவ்வளவு நேரம் நீடித்தது என்பது எனக்கு நினைவில் இல்லை, ஆனால் அது சிறிது நேரம் நீடித்தது. வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. அப்போது இருட்டாகக் கூட இல்லை. இருப்பினும் எங்களைச் சுட்டார்கள்.
(துப்பாக்கிச் சூடு தொடங்கப்பட்டதும்) நாங்கள் அனைவரும் வாகனத்தின் தளத்தில் படுத்துக்கொண்டோம். அதன்பிறகு நான் மற்றொரு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது எனது சகோதரன் உட்பட மற்றவர்கள் இறந்திருந்ததை உணர்ந்தேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.