தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மேகதாது அணைக் கட்டுவதை எதிர்க்கும் தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார் அமைச்சர் துரைமுருகன். அப்போது பேசிய அவர், "கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பைத் தமிழக அரசு பதிவு செய்கிறது. மேகதாதுவில் அணைக் கட்ட எந்தவித அனுமதியும் மத்திய அரசு கொடுக்கக்கூடாது.காவிரி பிரச்சினையில் நான் என்ன செய்தேன், நீ என்ன செய்தாய் என்ற வாதத்தை விட்டு விடுவோம். காவிரி பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்; தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மைச் சபிக்கும்" என்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார் துரைமுருகன்.
பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்பை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது " தமிழக மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் சட்டவிரோதமானது" என அவர் தெரிவித்துள்ளார்.