இந்தியாவில் கரோனா முதன்முதலில் பரவ தொடங்கியதில் இருந்தே பிளாஸ்மா சிகிச்சை முக்கியமான ஒன்றாக கருதப்பட்டுவந்தது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறிகுறி தோன்ற ஆரம்பித்த ஏழு நாட்களுக்குள் பிளாஸ்மா சிகிச்சையளித்தால், அது பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வழிவகுக்கும் என கூறப்பட்டதால், அரசாங்கங்களே பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துவந்தன.
ஆனால் பிளாஸ்மா சிகிச்சையால், கரோனா பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையென்றும், கரோனாவால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்குப் பிளாஸ்மா சிகிச்சையளிப்பது புதிய வகை கரோனாவிற்கு வழிவகுக்கலாம் என்றும் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகருக்கு கடிதம் எழுதினர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (17.05.2021) நடைபெற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் நிபுணர் கூட்டத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீளுவதற்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் இறப்பை தடுப்பதற்கோ பிளாஸ்மா சிகிச்சை உதவாது என்பதால், அதனைக் கரோனா சிகிச்சை முறையிலிருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இனி கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.