Skip to main content

மூன்றாவது அணி அமையுமா? உத்தவ் தாக்கரே - சந்திரசேகர ராவ் சந்திப்புக்குப் பின் ட்விஸ்ட் தந்த சிவசேனா!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

shiv sena

 

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதிலிருந்தே அத்தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தச்சூழலில் மம்தாவின் அதிரடி நடவடிக்கைகளால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மம்தாவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சிவனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதனால் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை எனக் கருதப்பட்டது.

 

இந்த நிலையில் தெலங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒன்றுதிரட்ட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் இம்மாத தொடக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரசேகர ராவ், (பாஜக தலைமையிலான) தேசிய ஜனநாயகக் கூட்டணி  மற்றும் (காங்கிரஸ் தலைமையிலான) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்கப்போவதாகவும், அது தொடர்பாக மஹாராஷ்ட்ரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை சந்திக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தும், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு தனியான அமைப்பை (கூட்டணியை) உருவாக்க முயற்சித்து வருகிறோம் என்றார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று சந்திரசேகர ராவும்,  உத்தவ் தாக்கரேவும் சந்தித்துப் பேசினர். அதன் பின்னர்  சந்திரசேகர ராவ் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவரை சந்தித்துப் பேசினார்.

 

மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக கருதப்பட்டநிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி அமையாது என சிவசேனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், ”காங்கிரஸ் இல்லாமல் அரசியல் கூட்டணி உருவாகும் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. மம்தா பானர்ஜி ஒரு கூட்டணியை பரிந்துரைத்த நேரத்தில், காங்கிரஸை அதில் சேர்ப்பது குறித்து பேசிய முதல் அரசியல் கட்சி சிவசேனா தான். அனைவரையும் அரவணைத்து வழிநடத்தும் திறன் சந்திரசேகர ராவுக்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இதனால் இந்திய அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்