அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவுகள், இந்தியப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தன. இதனால் செவ்வாயன்று (ஜூன் 9) சென்செக்ஸ் 35 ஆயிரம் புள்ளிகளை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 34 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே இறங்கியதால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
கடந்த பத்து நாள்களாகத் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த இந்தியப் பங்குச்சந்தைகள், நேற்று (ஜூன் 9) லேசான சரிவைச் சந்தித்தன. திங்களன்று (ஜூன் 8) சென்செக்ஸ் 34,370 புள்ளிகளில் நிறைவடைந்ததால், நேற்று எப்படியும் 35 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் இருந்தது. அதற்கேற்ப ஆரம்பநிலை வர்த்தகமே 34,520 புள்ளிகளில் தொடங்கியது.
ஒருகட்டத்தில், அதிகபட்சமாக 34,811 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ் அதன்பிறகு சர்ரென்று இறங்குமுகம் கண்டது. குறைந்தபட்சமாக 33,881 புள்ளிகளுக்குச் சென்ற நிலையில், இறுதியாக 33,956 புள்ளிகளில் நிறைவடைந்தது. நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 413 புள்ளிகள் கீழிறங்கியது. சென்செக்ஸில் வர்த்தக நிலையைக் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில், 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லேசான ஏற்றம் கண்டிருந்தன.
அதிகபட்சமாக இண்டஸ் இந்த் பங்குகள் 2.71 சதவீதம் ஏறியிருந்தன. சன்பார்மா (2.37%), மஹிந்திரா அண்டு மஹிந்திரா (1.68%), ஹெச்.டி.எப்.சி. (0.55%) மற்றும் ஐ.டி.சி., ஏஷியன் பெயிண்ட்ஸ், அல்ட்ரா சிமெண்ட், ஹீரோ மோட்டார்ஸ், டி.சி.எஸ். ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலைகளும் சற்று உயர்ந்து இருந்தன. இச்சந்தையில் பதிவு செய்துள்ள 2,749 நிறுவனங்களில், 1,111 நிறுவனங்களின் பங்குகள் கணிசமான ஏற்றம் கண்டிருந்தன. 1,470 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 168 நிறுவனப் பங்குகளின் விலைகளில் எந்த மாறுதலும் இல்லை.
சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் கடந்த 52 வாரங்களில் அதிகபட்ச அளவாக 66 நிறுவனங்களின் பங்குகள் உச்ச விலையைப் பெற்றன. 55 நிறுவனங்களின் பங்குகள் அதிகப்பட்ட சரிவைச் சந்தித்தன.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிப்டி, 10,046 புள்ளிகளுடன் நேற்றைய வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. அதாவது, முந்தைய நாளைக் காட்டிலும் 120 புள்ளிகள் இழப்பைச் சந்தித்துள்ளது நிப்டி. இங்கு பட்டியலிடப்பட்டுள்ள 50 நிறுவனங்களில், 13 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லேசான வளர்ச்சியைப் பெற்றன. 37 நிறுவனப் பங்குகளின் விலைகள் சரிந்து இருந்தன.
குறிப்பாக, டாக்டர் ரெட்டீஸ், இண்டஸ் இந்த், சன் பார்மா, இன்பிராடெல், எம் அண்டு எம், ஐஷர் மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், சிப்லா, ஹெச்.டி.எப்.சி., அல்ட்ரா சிமெண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சற்று உயர்ந்து இருந்தன. நிப்டியில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,959 நிறுவனங்களில் 757 நிறுவனப் பங்குகளின் விலைகள் மட்டும் சற்று ஏற்றம் கண்டிருந்தன. 1,135 நிறுவனப் பங்குகளின் விலைகள் இறங்குமுகத்தில் இருந்தன. 67 பங்குகளில் விலைகளில் எந்த மாற்றமும் இருக்கவில்லை.
முதலீட்டாளர்கள் வோடபோன் ஐடியா பங்குகள் மீது பெரிய எதிர்பார்ப்பு கொண்டிருந்த நிலையில், நேற்று இதன் பங்குகள் தடாலடியாக முந்தைய நாள் விலையைக் காட்டிலும் 16.67 சதவீதம் சரிந்தன. திங்களன்று இப்பங்கின் விலை 12 ரூபாய்க்கு முடிவடைந்து இருந்தது. நேற்று காலை 12.35 ரூபாய்க்கு ஆரம்பமான இதன் வர்த்தகம் நேரம் செல்லச்செல்ல குறைந்தபட்சமாக 9 ரூபாய்க்கும் சென்றது. பிறகு லேசாக ஏறிய இப்பங்கின் விலை வர்த்தகம் நேரம் முடியும் வரை 10.05 ரூபாயில் நிலை கொண்டது. இதனால் நேற்று வோடபோன் ஐடியா பங்குகளை வாங்குவோரைக் காட்டிலும் விற்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
இன்று (புதன்கிழமை) எப்படி இருக்கும்?:
அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் கரோனா வைரஸ் தாக்கத்தால் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளன. இதனால் நேற்று லண்டன் பங்குச்சந்தை, அமெரிக்க பங்குச்சந்தை நாஸ்டாக், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளிலும் பங்குச்சந்தைகள் லேசான சரிவைச் சந்தித்தன. இதன் தாக்கம் இந்தியப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தன. அதன் பாதிப்பு இன்றும் (ஜூன் 10) தொடரும் என்கின்றன பங்குத்தரகு நிறுவனங்கள்.
இதனால் நிப்டி சந்தை நிலவரம், இன்று அல்லது நடப்பு வாரத்தில் 9,850 - 9,900 வரையில் இறங்கலாம் என கணித்துள்ளது, ஜியோஜித் பைனான்சியல் நிறுவனம். மற்றொரு முன்னணி பங்குத்தரகு நிறுவனமான ஹெச்.டி.எப்.சி., 9,899 - 9,944 ஆக சரியும் என்று கணித்துள்ளது. ஆகையால் லாப நோக்கில் இருக்கும் முதலீட்டாளர்கள் இழப்பைச் சந்திக்காமல் இருக்க கணிசமான பங்குகளை விற்றுவிடலாம் என்றும் சில பங்குத்தரகர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
உலகளவில் பங்குச்சந்தைகளில் ஏதேனும் மாயாஜாலங்கள் நடந்தால் இந்தியப் பங்குச்சந்தைகளும் ஏற்றம் பெற வாய்ப்பு இருக்கிறது.