நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் மனு அளித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், ''தமிழ்நாட்டில் இருக்கின்ற மருத்துவ மாணவர்கள் நீட் தேர்வை எழுதி வெற்றியடையாமல் போனதால் மனம் வருந்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு 13 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இந்த ஆண்டிலேயே 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஏகமானதோடு நிறைவேற்றப்பட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பும்படி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருந்தோம். அதன்பிறகு 'ஒரு முறை நீயே பார்த்துவிட்டு வா' என்று உள்துறை அமைச்சரிடம் என்னை அனுப்பி வைத்தார்கள். உள்துறை அமைச்சரும் சரி பார்க்கிறேன் எனச் சொல்லிவிட்டார். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத காரணத்தால் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அனுப்பிவைத்தது கட்சி.
அதன் அடிப்படையில் 28 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று கோரிக்கை மனுவுடன் கடிதமும் கொடுத்தோம். அன்று இரவே குடியரசுத் தலைவரின் பதில் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், 'இதே கோரிக்கை தொடர்பான மற்றொரு கடிதத்தின் நகல் உரிய நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது' என இருந்தது. 29 ஆம் தேதியே உள்துறை அமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டு கோரிக்கை மனுவுடன் அனைவரும் காத்திருந்தோம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து அவரது உதவியாளர் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, ”12 மணிக்கு வரவேண்டாம், உங்களுக்கு வேறு நேரம் ஒதுக்கப்படும்” என்றார். ”எந்த நேரம் என்று சொல்லுங்கள்” என்று சொன்னோம். ”நேரத்தை பிறகு சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். இதுவரை எந்த நேரத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இரவு 9 மணிவரை காத்திருந்தும் பதில் வராததால் வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பினோம். அதற்கும் பதில் வரவில்லை'' என்றார்.