தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் பல பிறழ்வுகள் இருப்பதால், இது வேகமாகப் பரவலாம் என்றும், தடுப்பூசிகள் அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியை ஊடுருவலாம் என்றும் அஞ்சப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம், இந்தப் புதிய வகை கரோனாவைக் கவலைக்குரியது என வகைப்படுத்தியுள்ளதுடன், இந்தப் புதிய வகை கரோனாவிற்கு ‘ஓமிக்ரான்’ எனப் பெயரிட்டுள்ளது.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று கரோனா நிலை குறித்தும், தடுப்பூசி திட்டத்தின் நிலை குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஓமிக்ரான் வகை கரோனா குறித்தும், அதன் தன்மைகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
மேலும், இந்த ஓமிக்ரான் வைரஸால் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும், இந்தியா மீது ஏற்படும் தாக்கம் குறித்தும் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு விளக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, புதிய வகை கரோனா குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். அதிக கரோனா பாதிப்பு உறுதியாகும் கிளஸ்டர்களில், தீவிரமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும், கண்காணிப்பும் தொடரவேண்டுமெனவும் மோடி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து இந்த கூட்டத்தில், மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமெனவும், முகக்கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ள பிரதமர் மோடி, தடுப்பூசியின் இரண்டாவது டோஸின் கவரேஜை அதிகரிக்க வேண்டும் என்றும், முதல்டோஸ் செலுத்திக்கொண்ட அனைவருக்கும் சரியான நேரத்தில் இரண்டாவது டோஸ் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான தேவை குறித்து மாநிலங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், வெளிவரும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச பயண கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என இந்த கூட்டத்தில் அதிகாரிகளை அறிவுறுத்திய பிரதமர் மோடி, அனைத்து சர்வதேச பயணிகளையும் கண்காணிப்பது மற்றும் அவர்களை சோதனை செய்வதன் தேவையையும் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி கண்காணிப்பிலும், சோதனையிலும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குத் தனி கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.