மூளைக்காய்ச்சல் காரணமாக 104 குழந்தைகள் உட்பட மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்த சம்பவம் பிஹாரில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்க்க மருத்துவமனைக்கு வந்த அம்மாநில முதல்வரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகாரின் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நூற்றுக்கணக்கான குழந்தைகள் திடீர் உடல்நல கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து சோதனையில் அவர்களுக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பால் இதுவரை 104 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தைகளின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என்றும், பலியான குழந்தைகளின் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் இன்று முசாபர்நகர் மருத்துவமனைக்கு குழந்தைகளை பார்வையிட வந்த நிதிஷ் குமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கருப்பு கோடி காட்டினர். குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர் ஆத்திரமடைந்து மருத்துவமனை முன் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். நிதிஷ் குமார் திரும்பிப் போ என்று ஆவேசமாக கோஷமிட்டனர். குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர் விட்டபடியே கோஷமிட்டனர்.
இதனால், முதல்வர் நிதிஷ் குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகளைச் சந்திக்காமல் திரும்பிச் சென்றார். காவலர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் அந்த இடத்திலிருந்து நிதிஷ் குமார் புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மருத்துவமனையின் முன் திரண்டிருந்த மக்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பே முதல்வர் நிதிஷ் குமார் இங்கு வந்து, தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தால் ஏராளமான குழந்தைகள் உயிர் பிழைத்திருக்கும். மக்களும் அவர் மீது நல்ல மரியாதையை வைத்திருப்பார்கள். ஆனால், 100 குழந்தைகள் இறந்த பின் இன்று வந்துள்ளார் என கண்ணீருடன் தெரிவித்தனர்.