அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டது எனத் தொடர்ந்து கூறிவரும் நிலையில், கரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ் என மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், "கரோனாவுடன் வாழும் கலையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு இயற்கை வைரஸ் அல்ல என்பதால், இந்த வாழ்க்கை கலையைக் கற்பது மிகவும் முக்கியமானது. இது ஒரு செயற்கை வைரஸ். உலகம் முழுவதும் பல நாடுகள் தடுப்பூசி பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றன
அதேபோல சோதனை முறை முக்கியமானது. நமக்குச் சில சிறந்த சோதனை முறைகள் தேவைப்படுகின்றன. சரியான சோதனைகள் மூலம் நாம் உடனடியாக வைரஸை அடையாளம் காணலாம். ஏனெனில் இது ஆய்வகத்திலிருந்து வந்த வைரஸ், இது இயற்கை வைரஸ் அல்ல" எனத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக கரோனா வைரஸுடன் இந்தியா போராடி வரும் நிலையில், இந்த வைரஸ் இயற்கையானதா, செயற்கையானது என இந்தியா எந்தக் கருத்தும் கூறாமல் இருந்த நிலையில் நிதின் கட்கரியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.