உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையமும் இணைந்து கரோனா குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. இந்த ஆய்வில், வாரணாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 130 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.
இதில் வாரணாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கவலையளிக்கும் (அதிக பாதிப்பை ஏற்படுத்தும்) ஏழுவகை மரபணு மாற்றமடைந்த கரோனாக்கள் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனாவும் அடங்கும். இந்த டெல்டா வகை கரோனாவினால்தான் இந்தியாவில் இரண்டாவது அலை ஏற்பட்டது என விஞ்ஞானிகள் கண்டறிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
"டெல்டா வகை கரோனாதான், தற்போது நாட்டில் அதிகம் பரவியுள்ள மரபணு மாற்றமடைந்த கரோனா வகை என்பதை இந்த ஆய்வு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஆனால் அதே நேரத்தில், எதிர்பாராத வகையில் கரோனா பாதிப்புகள் அதிகரிப்பதைத் தடுக்க நாட்டில் பரவிவரும் பிற வகைகள் குறித்தும் நாம் கண்காணிக்க வேண்டியது அவசியம்" என செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மைய ஆலோசகர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.