பொருளாதார மேம்பாட்டு நிதிக்காக ரூ.50 லட்சம் கோடி தேவைப்படும் நிலையில், மாநில அரசுகளும் ரூ.20 லட்சம் கோடி தருவதற்கு முன்வரவேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பொருளாதார மீட்பு நிதியுதவியாக மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படும் நிலை உள்ளதால், அதில் ரூ.20 லட்சம் கோடியை தர மாநில அரசுகள் முன்வர வேண்டும் என நிதின் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய நிதின் கட்கரி, "மார்ச் மாதத்திலிருந்து சுமார் 6 லட்சம் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடிக்கிடந்தன, அவற்றை சீர்படுத்த வேண்டும். சுமார் 25 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாட்டில் வேலையின்மை பிரச்சனை இருந்த சூழலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பணப்புழக்கம் குறைந்துள்ளது. பொருளாதாரத்தின் சக்கரம் மீண்டும் செயல்படுவதற்கு நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது. இதில் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடியும், மாநில அரசுகள் ரூ.20 லட்சம் கோடியும், பொது மற்றும் தனியார் முதலீடுகளிலிருந்து ரூ.10 லட்சம் கோடியும் அரசுக்குத் தேவைப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.