2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் தற்போதிலிருந்தே தாயாராகி வருகின்றன. அதேநேரத்தில் இத்தேர்தலைச் சந்திக்க பாஜக - காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் பணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த சூழலில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுக்காக பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணிகளை ஆற்றி வரும் பிரசாந்த் கிஷோர், பீகாரின் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ்குமாரை சந்தித்துப் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மூன்றாவது அணி குறித்து பிரசாந்த் கிஷோரும், நிதிஷ்குமாரும் பேசியிருக்கலாம் என ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் ஒருவரே ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகவுள்ளதா எனக் கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில் நிதிஷ்குமாரும், பிரசாந்த் கிஷோரும் இந்த சந்திப்பை மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறியுள்ளனர்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சமீப காலமாக இந்த கூட்டணியில் புகைச்சல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.