புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதன்படி, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில், முன்னாள் முதல்வர் ரங்கசாமியின், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 சட்டமன்றத் தொகுதிகளும், பா.ஜ.க.- அ.தி.மு.க.வுக்கு 14 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், அ.தி.மு.க.வுக்கு 4 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்ததால், பா.ஜ.க.- அ.தி.மு.க. இடையே தொடர்ந்து தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அ.தி.மு.க. தரப்பு 7 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க பா.ஜ.க.விடம் வலியுறுத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் சார்பில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ்- தி.மு.க. இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டனர்.
அதன்படி, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க.வுக்கு 13 சட்டமன்றத் தொகுதிகளும், காங்கிரஸுக்கு 15 சட்டமன்றத் தொகுதிகளும், கூட்டணிக் கட்சிக்கு மற்ற இரண்டு தொகுதிகளும் என முடிவுசெய்யப்பட்டது.
கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், 21 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, இந்த முறை 15 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.