பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2020-2021 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இன்றைய இந்த பட்ஜெட் தாக்கலில் மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்கள், வேலைவாய்ப்பை பெருக்கும் யோசனைகள், பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் போன்றவை உள்ளனவா என நாம் ஆராய்ந்துக் கொண்டிருக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
சுமார் 2 மணி 43 நிமிடங்கள் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதன் மூலம் மிகநீண்ட பட்ஜெட் உரையை வாசித்த இந்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு பாஜகவின் ஜஸ்வந்த் சிங் 2 மணி நேரம் 13 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றியதே இந்திய வரலாற்றில் நிதியமைச்சர் ஒருவரின் மிகநீண்ட பட்ஜெட் உரையாக இருந்தது. இதனை தனது கடந்த பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் முறியடித்தார். கடந்த ஆண்டு 2 மணிநேரம் 15 நிமிடங்கள் உரையாற்றிய அவர், இந்த ஆண்டு 2 மணி 43 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார். இதன் மூலம், தனது முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். மிகநீண்ட பட்ஜெட் உரை என்பதை கடந்து, பல வளர்ச்சி திட்டங்கள் இதில் இருக்கின்றன என பாஜகவினர் கூறும் அதேநேரம், இது ஒரு வெற்று அறிக்கை என ஒருதரப்பு இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.