சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சியில் மூன்றாவது முறை மத்திய அமைச்சராக கிரிராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சராக கிரிராஜ் சிங் பதவி வகித்த் வருகிறார்.
இவர் கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளியான போது, இஸ்லாமியர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை, அதனால் அவர்களுக்கு நான் பணியாற்றப் போவதில்லை என்று சர்ச்சையாக பேசினார். மேலும் அவர் கூறியதாவது, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி அவர்கள் மீது ஒருபோதும் பாரபட்சம் காட்டவில்லை என்றாலும் எங்கள் வேட்பாளர்களைத் தோற்கடிக்க அவர்கள் வழிவகுத்துவிட்டனர்’ எனப் பேசினார். இவரது பேச்சு அப்போது பெரும் சர்ச்சையாக மாறியது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், இஸ்லாமியர்கள் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “இது இந்த நாட்டின் துரதிஷ்டம். 1947-ல் பாகிஸ்தான் மத அடிப்படையில் பிரிந்தபோது அனைத்து இஸ்லாமியர்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால், இதுபோன்ற கேள்விகளை யாரும் எழுப்பியிருக்க முடியாது..
இஸ்லாமியர்களை இங்கு வாழ வைத்தது மிகப்பெரிய தவறு. மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டிருந்தால், முஸ்லிம்கள் ஏன் இங்கு இருக்க அனுமதித்தார்கள்? அவர்கள் இங்கு வாழ அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது” எனப் பேசினார். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.