வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்ட நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில் நேற்று (03.10.2021) உத்தரப்பிரதேசத்திற்கு வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாவட்டத்தில் இணையச் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் புகாரின் பேரில் மத்திய உள்துறை இணையமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வன்முறைச் சம்பவத்தை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிப்பார் என உத்தரப்பிரதேச காவல்துறை கூறியுள்ளது. இதற்கிடையே வன்முறை நடைபெற்ற இடத்திற்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து விவசாயிகளும், காங்கிரஸ் கட்சியினரும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சி, லக்கிம்பூர் வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து நாளை நாடு முழுவதுமுள்ள மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இந்தநிலையில் லக்கிம்பூர் வன்முறைச் சம்பவம் தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர், "இது மிகவும் வருந்தத்தக்க, துரதிர்ஷ்டவசமான சம்பவம். இந்த சம்பவத்தைக் கண்டிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர்கள் (பாஜக அரசு) ஜனநாயகத்தை நம்பவில்லை. எதேச்சதிகாரத்தை மட்டுமே விரும்புகிறார்கள். இது ராம ராஜ்யமா? இல்லை இது கொலை ராஜ்யம்" எனக் கூறியுள்ளார்.