டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டதன் பேரில், உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை நியமிக்க, தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைச் செய்துள்ளார்.
நீண்ட நெடிய அனுபவம் கொண்ட வழக்கறிஞராக திகழ்ந்த உதய் உமேஷ் லலித், உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகளில் நீதிமன்றத்திற்கு உதவக்கூடிய வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். குறிப்பாக, 2ஜி வழக்கு விசாரணையின் போது, சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞராக நேரில் ஆஜராகி வாதிட்டிருந்தார்.
கடந்த 2014- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13- ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய சட்டத்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவருக்கு கோப்புகளை அனுப்பும். அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்சநீதிமன்றத்திற்கான தலைமை நீதிபதியைத் தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
எனினும், உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டால், வரும் நவம்பர் 8- ஆம் தேதி வரை மட்டுமே அவரின் பதவிக்காலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.