சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்த சசிகலா இன்று (27.01.2021) விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அவரது சிறை தண்டனை முடிந்ததற்கான ஆவணங்களைப் போலீசார் சசிகலாவிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், விக்டோரியா அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். சிறைத்துறைக் கண்காணிப்பாளர் லதா தலைமையிலான போலீசார், சசிகலாவிடம் கையெழுத்து பெற்ற நிலையில், தற்பொழுது சொத்துகுவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை முடிவு பெற்றதற்கான ஆவணங்களை சசிகலாவிடம் ஒப்படைத்தனர்.
சசிகலா சிகிச்சை பெறும் விக்டோரியா மருத்துவமனையில் டி.டி.வி.தினகரன், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா, செந்தூர் பாண்டியன் ஆகியோர் உள்ளனர். விடுதலையாகும் சசிகலாவைக் காண வெளியே அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் குவிந்துள்ளனர். விடுதலை செய்யப்பட்டாலும் மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருப்பதால் பிப்ரவரி முதல் வாரத்தில்தான் சசிகலா சென்னை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.