காவிரியில் நீர் திறப்பது சாத்தியமில்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்று காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டத்தில் பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது. நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு கர்நாடகா 2,600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என அந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'தமிழகத்திற்கு காவிரியில் இருந்து மேலும் நீர் திறப்பு என்பது இயலாத காரியம். கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருக்கும் தண்ணீர் தங்களுக்கே போதுமானதாக இல்லை. இந்த அணைகளில் இருக்கும் நீர் குடிநீர் சேவைக்கே போதுமானதாக இருக்கும் காரணத்தால் தமிழகத்திற்கு நீரை கொடுக்க இயலாது' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இன்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக தரப்பு அதிகாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என கர்நாடக தரப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.