கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஆளுநர் ஆரிப் முகமது கானின் கோரிக்கையை நிராகரித்தார் முதல்வர் பினராயி விஜயன்.
கேரள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமதுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இது தொடர்பாக சட்டத் திருத்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியும் அது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கேரள ஆளுநர் ஆரிப் கான் தன்னை விமர்சித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதன் ஒரு கட்டமாக கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க கோரி மாநில அரசுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று காலை கடிதம் எழுதியிருந்தார். "உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு கேரளத்தைப் புரிந்துகொள்ள முடியாது" என அமைச்சர் பாலகோபால் பேசியதற்கு பதிலடியாக அவரை நீக்க ஆளுநர் பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் ஆளுநரின் கோரிக்கையை புறந் தள்ளுவதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.