'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (30/05/2021) காலை 11.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான சவாலை உலகம் சந்தித்திருக்கிறது. பெருந்தொற்று காலத்திலும் இயற்கைப் பேரிடரை இந்தியா மிக வெற்றிகரமாகச் சமாளித்துள்ளது. எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதனை உறுதியுடன் சமாளிப்போம் என்பது நிரூபணமாகியுள்ளது. கரோனா இரண்டாவது அலையைச் சமாளிக்க மருத்துவர்கள், செவிலியர்களின் சேவை பெரும் உதவியாக உள்ளது. ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யும் எனது தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படுகிறது. ஆக்சிஜன் ஏற்றிச் சென்ற ரயில்களை நிறைய பெண் ஓட்டுநர்கள் இயக்கியது உத்வேகம் தருகிறது. போர்க்காலத்தில் செயல்படுவது போல நமது முப்படைகளும், விஞ்ஞானிகளும் செயல்பட்டனர்.
பெருந்தொற்று காலமாக இருந்தபோதும் வேளாண்மைத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். எனது ஆட்சியில் சுகாதாரமான குடிநீர், வீடு, மின்சாரம் என அனைத்தும் கிடைத்து மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஒரு அடுப்பு கூட சமைக்கப்படாமல் அணைந்தது என்ற நிலை இல்லாத அளவுக்கு மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தரப்பட்டன. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியா முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது." இவ்வாறு பிரதமர் கூறினார்.